TNTET இந்த ஆண்டு இல்லை? - ஆசிரியர்கள் அதிர்ச்சி
2025-ம் ஆண்டுக்கான டி.ஆர்.பி அட்டவணையில் டெட் தேர்வு இடம்பெறாததால், ஆசிரியராக கனவு காணும் பலருக்கு ஏமாற்றம். டெட் தேர்வை இந்த ஆண்டு நடத்த தேர்வர்கள் கோரிக்கை
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், அதில் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகாததால் ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள், அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம், ஒவ்வொரு ஆண்டுக்கும், அந்த ஆண்டில் நிரப்பப்படும் பணியிடங்களின் விபரங்கள், அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடைபெறும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிடும். இந்த ஆண்டுக்கான அட்டவணை 3 மாதங்களாகியும் வெளியாகாமல் இருந்ததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (மார்ச் 24) 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வு அட்டவணையில், இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏனெனில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வாக நடத்தப்படும் டெட் தேர்வு (TNTET) குறித்த அறிவிப்பு அட்டவணையில் இடம்பெறவில்லை. இந்த டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. 2024-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர திட்ட அட்டவணையின்படி, டெட் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியாகி, தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இத்தேர்விற்கான அறிவிப்பு திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், கடைசி வரை அறிவிப்பு வெளியாகவில்லை. 2024-ம் ஆண்டில் டெட் தேர்வு நடைபெறாத நிலையில், இந்தாண்டாவது நடைபெறுமா என தேர்வர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அட்டவணையின்படி, இந்தாண்டு டெட் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிடவில்லை என கருதப்படுகிறது. இதனால் ஆசிரியர் பயிற்சி முடித்து, ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஏனெனில், மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தேர்வு கட்டாயம் ஆகும். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) விதிமுறைகளுக்கு உட்பட்டு இத்தேர்வு நாடு முழுவதும் மாநிலங்கள் அளவில் நடைபெறுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதனால், ஆசிரியர் கனவுடன் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தகுதித்தேர்வை எழுத காத்துக்கொண்டு இருக்கின்றனர். தற்போது டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், செட் தேர்வை நடத்த திட்டமிட்டது போல், டெட் தேர்வையும் ஒவ்வொரு ஆண்டும் இடைவிடாமல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment