ஆசிரியர் காலி பணியிடங்கள் - தமிழக அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்? - டிடிவி தினகரன் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 16 June 2025

ஆசிரியர் காலி பணியிடங்கள் - தமிழக அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்? - டிடிவி தினகரன்



ஆசிரியர் காலி பணியிடங்கள் - தமிழக அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்? - டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நிலவும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இடை நிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் 20 ஆயிரம் பேர் வெற்றி பெற்ற நிலையில் 2563 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திமுக அளித்த வாக்குறுதி!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசிடம் தொடர்ந்து ஏராளமான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் முன்னெடுத்த போராட்டங்களில் கலந்து கொண்டு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை!

2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் வெளியிட்ட வாக்குறுதியிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் முந்தைய கோரிக்கைகளை திமுக அறிவிப்புகளாக வெளியிட்டது. எனவே திமுகவுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெருமளவில் ஆதரவு அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் நிதி நிலைமை சரியில்லாததை சுட்டிக்காட்டி பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

தொடரும் அரசு ஊழியர்கள் போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் அரசு துறையில் சுமார் 4.5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில் அவை நிரப்பப்பட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆசிரியர் நியமனங்களில் திமுக அரசு காட்டும் அலட்சியம் காட்டுவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். டிடிவி தினகரன் எழுப்பும் கேள்வி!

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டியுள்ளார்.

2563 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய பணி நியமன போட்டித் தேர்வை எதிர்கொண்டவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் காலிப்பணியிட அறிவிப்புக்கு ஏற்ப 2,563 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கும் துரோகம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அடக்குமுறையை ஏவும் திமுக அரசு!

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதையே கொள்கையாக வைத்திருப்பதோடு, அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை கூட நிரப்ப மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க நடவடிக்கை தேவை!

எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நியமன போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு அரசு பள்ளிகளில் நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

இடை நிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுக்கும், எப்போது அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பும் என ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here