ஆசிரியர் நியமன தேர்வு முடிவில் குளறுபடி; மாணவ பருவத்தில் தேர்வெழுதினரா என கேள்வி
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு நடந்த நியமன தேர்வில், வயது அடிப்படையில், மாணவ பருவத்தில் இருக்கும் பலர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.
தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு லட்சம் பேர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்த போதும், 12 ஆண்டுகளாக நியமனங்கள் நடக்கவில்லை. இந்நிலையில், 2024 ஜூலையில், 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், நியமன தேர்வு என்ற பெயரில் டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை, 25,000க்கும் மேற்பட்டோர் எழுதினர். இதன் முடிவு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் பலர், 2005, 2006ல் பிறந்தவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2024ல் இவர்கள் நியமன தேர்வு எழுதிய போது 17, 18 வயது தான் இருக்கும். அந்த வயதில் எவ்வாறு ஆசிரியர் பட்டய தேர்வு முடித்து, நியமன தேர்வை எழுத முடியும் என்ற, புதிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது. கவனக்குறைவு
இதுகுறித்து தேர்வு எழுதிய ஆசிரியர்கள் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: நியமன தேர்வை, பிளஸ் 2 முடித்து, அதன் பின் ஈராண்டுகள் ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்து, டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் தான் எழுத தகுதியானவர்கள். இதன்படி, 17 வயதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர், 19 வயதில் ஆசிரியர் பட்டியப்படிப்பு முடிக்க முடியும். 2022ல் தான் கடைசியாக, டி.இ.டி., தேர்வு நடந்தது.
இதன்படி, 2005ல் பிறந்தவர்களுக்கு, 2022ல் 17 வயதாகும். அப்போது, அவர்கள் பிளஸ் 2 முடித்திருக்க முடியும். ஆனால், எவ்வாறு டி.இ.டி., தேர்ச்சி பெற்று, நியமன தேர்வை எழுதியிருக்க முடியும்.
தேர்ச்சி முடிவு பட்டியலில் வயதை தவறாக குறிப்பிட்டிருக்கலாம் என்றாலும், 12 ஆண்டு களுக்கு பின் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்திய தேர்வில், டி.ஆர்.பி., அதிகாரிகள் இவ்வாறு பொறுப்பின்றி இருக்கலாமா? கவனக்குறைவு என்றாலும் இதுவரை டி.ஆர்.பி., ஏன் விளக்கம் அளிக்கவில்லை.
டி.இ.டி., தேர்ச்சி பெற்று, பல ஆண்டுகள் காத்திருந்து இந்த நியமன தேர்வை எழுதினோம். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி காலியாக உள்ள பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுத்தால், தற்போது தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் கிடைத்திருக்கும்.
முதல்வர் ஸ்டாலின், 'கல்வியும், மருத்துவமும் இரு கண்கள்' என்று கூறுகிறார். ஆனால், அவரது ஒரு கண்ணான - கல்வியில் தொடரும் பிரச்னையை எப்போது தான் சரிசெய்வார் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment