JACTTO-GEO : BACK TO ZERO! _✍🏼செல்வ.ரஞ்சித் குமார் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 26 May 2025

JACTTO-GEO : BACK TO ZERO! _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

JACTTO-GEO : BACK TO ZERO! _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

JACTTO-GEO : BACK TO ZERO!

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

தமிழ்நாட்டு ஊழியர் நலனுக்காகப் பிடுங்கிய பிடுங்கெல்லாம் பத்தாதென அகில இந்திய ஊழியர் நலனுக்காகப் பிடுங்கக் கிளப்பப்பட்டுள்ளது JACTTO-GEO பதாகை.

இனி சமூகஊடகங்களிலும் சங்க இதழ்களிலும் 'இது. . . இது தான் ஊழியர் நலன் காக்கும் போக்கு; அகில இந்திய ஊழியர் நலன் காத்தால்தான் நம் நலனும் காக்கப்படும்; இல்லையேல் பாசிசம் இங்கு பாசியாகப் படர்ந்துவிடும். . . . ப்ளா. . . ப்ளா. . .' என்று பசித்த வயிற்றுக்கு ஈரத்துணியை கிழித்துத்தரக்கூட உணர்வற்றோர் தாங்கள் உண்ட முடித்ததின் துரும்பைக் குத்திக் கொண்டே வகுப்பெடுப்பர்.

_(உரிமை எங்கு பறிபோனாலும் மீட்கத்துணிவதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால், *'இவிங்க புடுங்குனா புண்ணாக்கு; அவிங்க புடுங்குனாத்தேன் பொன்னாக்கும்!'* எனும் போது அஃது உரிமை மீட்பிற்கான குரலல்ல; சுய எதிர்ப்புணர்வின் எச்சில். அதைக் கையிலேந்தி அந்தாதி பாடுவது மதியன்று)_

மேலும், மாநில அளவிலான கோரிக்கைகளுக்காக கள உறுதிமிக்க ஒற்றைப் போராட்டத்தைக் கூட 4 ஆண்டுகளாக முன்னெடுக்கத் துப்பற்றபடி JACTTO-GEO பதாகையை வன்புணர்வு செய்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த கும்பலும், இனியும் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்காது, JACTTO-GEO கோரிக்கைகளுக்குத் தொடர்பற்ற 9 அறிவிப்புகள் குறித்து ஊழியர்களிடம் பிரச்சாரம் செய்யப் போகிறதாம். . .! உலகத் தொழிற்சங்க வரலாற்றில் முதல்முறையாக எந்தவிதக் கோரிக்கை ஏற்புமற்ற நிலையில், சற்றும் தொடர்பற்றோர் போட்டுக் கொடுத்த மேடையில், அதிகாரிகள் தலைமையில் விளக்கக்கூட்டம் நடத்திய TETOJACன் செய்கையையே தூக்கிச் சாப்பிடும் செய்கையாக JACTTO-GEOன் 9 அம்ச அறிவிப்புப் பரப்புரை வரலாற்றில் பிளாட்டின எழுத்துகளால் எழுதப்படப்போகிறது.

இந்த ஏமாற்று வேலையையும் செவ்வனே செய்து கொடுக்க JACTTO-GEO உறுப்புச் சங்கங்களின் மாவட்ட - வட்டார - நகரப் பொறுப்பாளர்கள் இந்நொடியே தயாராகி இருப்பர். ஏனிந்த தொடர் ஏமாற்று நாடகமெனக் கேள்வி எழுப்பி இதைப் புறக்கணிக்க உரிமை உணர்வுள்ளோர் ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஏனென்றால், அவர்களின் உரிமை உணர்வின்மையைக் கேள்விக்குட்படுத்தும் துணிவுமிக்க பெரும்பான்மை உறுப்பினர்கள் எந்தவொரு சங்கத்திலும் இல்லவே இல்லை. மீறி எவராகிலும் கேள்வி எழுப்பினால் அவர்களைச் சங்க விரோதியெனக் கட்டங்கட்டி சட்டம் மாட்ட மேலிருந்து உமிழப்படும் நாட்டாமைக் கதைகளுக்குத் தலையாட்ட மட்டும் பெரும்பான்மையினர் எப்போதும் தயாராகவே உள்ளனர்.

சங்கம் தனக்கு எதற்காகப் பொறுப்பு / பதவி வழங்கியுள்ளது என்ற அடிப்படையை உணராது, சங்கத்தில் தாம் பெற்ற பொறுப்பை அடுத்தமுறையும் தொடர அனைத்திற்கும் ஆமாம்சாமி போடுவதே கடமையென பெரும்பான்மையினர் கருதுவதன் விளைவால், 'உறுப்பினர்களுக்காகவே சங்கம்' என்ற காலம் கானலாகி 'பொறுப்புகளுக்காக மட்டுமே சங்கம்' என்ற இழிநிலைதான் இன்றைய கள எதார்த்தமாக உள்ளது. தமது சங்கமும் பொறுப்பாளர்களும் புனிதப் பசுக்களல்ல; கேள்விகளும் விமர்சனங்களுமே அவற்றின் அச்சாணி என்பதை உணர்ந்து பெரும்பான்மை அடிப்படை உறுப்பினர்கள் செயலாற்ற முன்வராதவரை மயிர் நுனியளவு மாற்றத்தைக் கூட அவரவர்தம் சங்கத்திலோ - JACTTO-GEO போக்கிலோ - நமக்கான உரிமைப் பறிப்புகளிலோ நிகழ்த்திட இயலாது.

ஏனெனில், இன்று பறிபோனவைகளெதுவுமே நேற்றைய ஆட்சியாளர்கள் தாமே ஈந்த கருணை அல்ல; அவை அனைத்துமே சங்கங்களின் வலிமையான போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்ட உரிமைகள். தங்கம் செய்யாததையும் சங்கம் செய்யும் - சங்கம் ஆட்சியாளர்களின் அங்கமாக மாறாமல் இருந்தால்.

ஆனால், இதற்கு நேர்மாறாக அடிப்படை உறுப்பினர்களிடையே தத்தமது சங்கங்களின் இயங்காத் தன்மை மீது அடர்ந்த அமைதியும், திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற அலுவல் பாசறையாகப் பணியாற்ற வைக்கப்பட்டுள்ள JACTTO-GEO பதாகையின் செயல்படா செயல்பாட்டால் திமுக+ மீது மிதமிஞ்சிய எதிர்ப்புணர்வும் தொடர்ந்து பெருகி வருகிறது. இதன் முழுமையான விளைவு விரல் நுனியில் தெறித்து வெளிப்படுகையில், இப்போதிருப்பதைவிடக் கொடியதாக இருக்கும். . . . அரசு ஊழியர்களுக்கும் - ஆசிரியர்களுக்கும் - ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும்.

கோடிக்கால்

பூதமின்று

அதிகாரத்தின்

கொடிக்கம்பம்

ஆனதடி! உரிமைமீட்பு

உணர்வெல்லாம்

அதிலேற்றும்

கொடிக்கயிறெனத்

தொங்குதடி!

ஆட்சியாளர்

கொடிபறக்க

ஏற்றியிறக்கி

கட்டிக்கட்டியே

இத்துப்போகுதடி!

இத்தகயிறு

தெறிக்கையிலே

அதிலேற்றிய

கொடிமட்டும்

மிஞ்சுமோடி!?

ஆள்வோரும்

அவர்முன்

தவழ்வோரும்

முடிவுணர்ந்து

திருந்துவாரோடி!?

திருத்தப்படாதே

போனால்,

தமிழெங்கும்

வருத்தமே

மிஞ்சுமடி!

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here