*மாணவர்களை துரத்தும் பொதுத்தேர்வுகள்* -ராக குமார்-
"டேய் என்னடா ஒவ்வொரு புக்கும் இவ்வளவு பெருசா இருக்கு, இதை எப்படிடா வீட்டுக்கு கொண்டு போறது? நான் கொண்டு வந்திருக்க ஒரு கட்டப்பை பத்தாது டா"
அப்பொழுது பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம், BIO-MATHS குரூப்பில் அட்மிஷன் போட்ட மாணவருக்கு தமிழ்,ஆங்கிலம் தலா ஒரு புத்தகமும், மற்ற நான்கு முதன்மை பாடங்களுக்கு தலா இரண்டு புத்தகங்களுமாய் மொத்தம் 10 புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த புத்தகங்களை எல்லாம் எப்படி படிக்க போகிறோம் என்பதை விட, எப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்லப் போகிறோம் என்பதே மாணவருக்கு அந்த நேரத்து கவலையாக இருந்தது. அதைத்தான் தன் நண்பனிடம் புலம்பி கொண்டிருந்தார் அந்த மாணவர்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகமான பிறகு பாட புத்தகங்களும் நீட் தேர்வை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டது.
பதினோராம் வகுப்பில், அறிவியல் பிரிவில் சேரும் மாணவர்கள், புத்தகங்களின் எண்ணிக்கையையும் அளவையும் பார்த்து அஞ்சத் தொடங்கினர். கலைப்பிரிவுகளிலும் கூட பாடப் பொருளின் அளவு மிக அதிகமாக த்தான் இருக்கிறது.
கடந்த கல்வி ஆண்டில் (2022-23) 11- ஆம் வகுப்பில் 8.5 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 7.8 லட்சம் மட்டுமே. சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு முன்னரே 11- ஆம் வகுப்பில் இருந்து வெளியேறி இருந்தனர்.
இதற்கு முக்கிய காரணம் மிக அதிகமான பாடப்பகுதி, கடினமான பாடப் பொருளை புரிந்து கொள்வதில் ஏற்படும் சிரமம், BLUR PRINT இல்லாதது மற்றும் 10,11,12 ஆம் வகுப்புகளில் தொடர்ச்சியான மூன்று பொது தேர்வுகள் போன்றவைகளால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக மாணவர்கள் மேல்நிலைக் கல்வியில் இருந்து வெளியேறி ITI, POLYTECHNIC போன்ற தொழிற் படிப்புகளில் சேரத் தொடங்கினர்.
11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது, 11- ஆம் வகுப்பு மதிப்பெண்களும் உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நடைமுறை உடனே கைவிடப்பட்டது என்றாலும் கூட, நீட் தேர்வு மற்றும் பிற போட்டித் தேர்வுகளைக் காரணம் காட்டி 11- ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது இன்னமும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
11- ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில்,குறிப்பாக கணிதப் பாடம் இருக்கக்கூடிய அறிவியல் பிரிவில் மாணவர்களை சேர்ப்பது ஆசிரியர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. பெரும்பாலான பள்ளிகளில் கணிதப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது. மிக அதிகமான பாடப்பகுதிதான் இதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.
நீட் தேர்வுக்கான பாடப்பகுதி குறைக்கப்பட்ட பின்னரும் கூட, 11- ஆம் வகுப்பில் பாடப்பகுதி இன்னமும் குறைக்கப்படவில்லை.
11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியை தழுவிய மாணவர்களில் பெரும்பாலானோர் 12- ஆம் வகுப்பில் தொடர்ந்து படிக்க வருவதில்லை.
கடந்தாண்டு 11-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இப்பொழுது நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வருகை புரியவில்லை.
11- ஆம் வகுப்புக்கு மாவட்ட அளவில் தேர்வு நடைபெற்ற பொழுது மாணவர்களின் இடைநிற்றல் மிகவும் குறைவு.ஆனால் 11- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வந்த பிறகு இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
இந்த பதினோராம் வகுப்பு பொது தேர்வானது கடந்த மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் மாணவர்களை மேல்நிலைக் கல்வியில் இருந்து துரத்தி இருக்கிறது.
மாணவர்களின் இடைநிற்றலை குறைப்பதற்காக, தமிழ்நாடு அரசும் பள்ளிக் கல்வித் துறையும் எவ்வளவோ பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளையில், இந்த 11- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் இடைநிற்றலை அதிகரித்திருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
10, 11,12 ஆம் வகுப்பு என தொடர்ச்சியான மூன்று பொதுத் தேர்வுகள் மாணவர்களிடையே மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மன அழுத்தமும் மாணவர்களின் இடைநிற்றலுக்கு முக்கிய காரணமாகிறது.
மிக அதிகமான பாடப்பகுதியை நடத்த வேண்டி இருப்பதால் ஆசிரியர்கள் மாணவர்களுடன் உரையாட முடிவதில்லை. உரையாடுவதற்கு நேரமின்மையால், சில நேரங்களில் மாணவர்களின் சிறு நெறிபிறழ் நடத்தையை கூட ஆசிரியர்களால் சரி செய்ய முடியாமல் போய்விடுகிறது.
எனவே பதினோராம் வகுப்பு பாடப்பகுதிகளை குறைத்து, கடினமான பாடப் பகுதிகளை நீக்கி, Blue Print முறையுடன் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் அல்லது பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வையே ரத்து செய்து மாணவர்களை மேல்நிலைக் கல்வியில் தக்க வைக்க வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பெரு விருப்பமாய் இருக்கிறது
No comments:
Post a Comment