Rainy season - Precaution instructions - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 19 October 2024

Rainy season - Precaution instructions - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தொடக்க & நடுநிலைப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-10-2024...

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டு பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து, -

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பருவ மழை தொடங்கியுள்ளதால், மழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் அதீத கவனத்துடன் செயல்படவும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த எத்தகைய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1. மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பள்ளிகளிலுள்ள பழுதடைந்த கட்டடங்களின் அருகில் மாணவர்கள் செல்லாது இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. பழைய கட்டடங்கள் மழை நீரால் பாதிப்புக்குள்ளாகி இடிந்து விழும் நிலையில் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்படி கட்டடங்களுக்குள் மாணவர்களை அனுமதிக்காமல் கவனத்துடன் இருத்தல் வேண்டும். மேலும் பழுதடைந்த கட்டிடங்களைச் சுற்றி தற்காலிக வேலி பி அல்லது தடுப்புகள் ஏற்படுத்துதல் வேண்டும்.

3. அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியர் பாதுகாப்பான கட்டடங்களில் அமர்ந்து கல்வி பயில்வதை ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.

4. பள்ளிகளில் உள்ள மாணவர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான ஆவணங்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும் ஆவணங்கள் கீழ் தளத்தில் இருக்கும்பட்சத்தில், அதனை உடனடியாக மழை நீர் புகாதவண்ணம் பாதுகாப்பான இடத்திற்கு அல்லது மேல்தளத்திற்கு மாற்றம் செய்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

5. மழைக் காலங்களின் போது தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்படும் அறிவிப்புகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

6. பள்ளியின் சுற்றுச் சுவர் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்பட்சத்தில் அதன் அருகில் மாணவர்கள் செல்வதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

7. பள்ளி வளாகத்தில் மின் கசிவு ஏற்படாத வண்ணம் மின் சாதனங்களையும் மின் கம்பிகளையும் மிகுந்த எச்சரிக்கையுடன் பராமரித்து வர வேண்டும். மாணவர்களை மேற்படி மின் சாதனங்களையும் மின் கம்பிகளையும் தொடாதவாறு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு மின்சாதன கருவிகள் மற்றும் மின்சாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

8. மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதையும் மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைத்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து குறைதீர் நடவடிக்கையினை உடனடியாக ஆசிரியர்/ தலைமை ஆசிரியர்கள் எடுத்திட வேண்டும்.

9. பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின் கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக் கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக மின்வாரியத்தின் துணையுடன் அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

10. மின் சுவிட்சுகளின் இயக்கம் (switches) சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆய்வு செய்திட வேண்டும். பழுதடைந்த மின் சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக் காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

11. பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மாணவர்கள் கைகளில் தொடுவதோ, கால்களால் மிதிப்பதோ அல்லது மின்கம்பி வடம் பதிப்பதற்கான பள்ளம் தோண்டியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் செல்வதோ கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

12. மின் மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 13. பள்ளியில் உள்ள ஒவ்வொரு கட்டிடத்தின் மேற்கூரையிலும் மழை நீர் தேங்காதவாறும், மழை நீர் வடிவதற்கான துவாரங்கள் இலை தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

14. பள்ளியில் உள்ள வகுப்பறைகளின் சுவர், தலைமை ஆசிரியர் அறையின் சுவர், சமையலறையின் சுவர் மற்றும் பள்ளியின் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் உறுதி தன்மையை முன்கூட்டியே கண்காணித்து பழுதுகள் ஏதும் இருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக சரி செய்திட வேண்டும்.

15. மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய சத்துணவு தயார் செய்யப்படும் பள்ளிகளின் சமையலறை மேற்கூரைகளில் இருந்து மழை நீர் கசிவு இல்லாத வகையில் உணவு பாதுகாப்பாக சமைக்கப்படுவதை ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.

16. மழைக்காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கையாக பள்ளங்கள் சரி செய்யப்பட வேண்டும்.

17. பள்ளியில் உள்ள கழிப்பறைகளை தூய்மையாகவும் சுகாதாரமான முறையிலும் தொடர்ந்து பராமரித்து வர வேண்டும். மேலும் கழிப்பறைகளின் மேற்கூரைகள் பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதையும் கண்காணித்து பயன்படுத்திடல் வேண்டும்.

18. ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால் நோய் பரவலைத் தடுத்திடும் வகையில் அத்தகைய கழிப்பறைகளை பூட்டிவைத்திட வேண்டும். மேலும் பாதிப்புகளை விரைவு நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்திடல் வேண்டும்.

19. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தரைதள நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிப்பறைக் கழிவு நீர்த்தொட்டி ஆகியவை மூடிய நிலையில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும். மேலும் அவற்றின் அருகில் பள்ளி மாணவர்கள் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

20.பள்ளி வளாகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள் அல்லது புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும்பட்சத்தில் இந்த இடங்களில் உள்ள பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்க வேண்டும்.

21. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

22.மழைக் காலங்களில் நோய்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மாணவர்களுக்கு இது சார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி, பருகுவதற்கு காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.

23.மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டியின் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்திடல் வேண்டும்.

24.மழைக்காலங்களில் மாணவர்கள் மழையில் நனையாமலும், இடி மின்னல் போன்ற தாக்குதலுக்கு உட்படாமலும் பாதுகாப்பாக இருப்பதற்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்.

25.மழைக் காலங்களில் மரங்களுக்குக் கீழ் ஒதுங்குவதால் ஏற்படும் அபாயம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்.

26.பள்ளிகளில் உள்ள பழுதுகள் மற்றும் குறைகளை சரி செய்யும் நேர்வில் மாணவர்களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது.

27.100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை உரிய அலுவலர்கள் மூலம் பெற்று பள்ளிகளின் பராமரிப்பு பணிகளை சீர் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

28.நடமாடும் மருத்துவக் குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும் தலைமை ஆசிரியர் அறையிலும் எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் பள்ளிப் பார்வை மற்றும் ஆய்வுகளின் போது மேற்கண்ட அறிவுரைகள் சரியாக பின்பற்றப்படுகின்றதா? என்பதை தொடர்ந்து கண்காணித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD Rainy season - Precaution instructions PDF

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here