Vice-Chancellor appointment: The case pending in the Supreme Court should be expedited to break the deadlock! - PMK leader Dr. Anbumani Ramadoss statement - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 19 December 2024

Vice-Chancellor appointment: The case pending in the Supreme Court should be expedited to break the deadlock! - PMK leader Dr. Anbumani Ramadoss statement



துணைவேந்தர் நியமனம்: முட்டுக்கட்டையைப் போக்க உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்த வேண்டும்! - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை Vice-Chancellor appointment: The case pending in the Supreme Court should be expedited to break the deadlock! - PMK leader Dr. Anbumani Ramadoss statement

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் தேடுதல் குழுவை அமைத்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், அதனால் அந்த ஆணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆளுனர் ஆர்.என்.இரவி கூறியுள்ளார். இதன்மூலம் துணைவேந்தர் நியமனம் குறித்து அரசுக்கும், ஆளுனருக்கும் மேலும் ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. 6 பல்கலை.களின் துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ள நிலையில் இந்த மோதல் தேவையற்றதாகும்.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசுக்கும், ஆளுனருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக் கழகங்களுக்கும் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இவற்றில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 அக்டோபர் மாதம் முதலும், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 நவம்பர் மாதம் முதலும் இரு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளன. இவை தவிர புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாததால் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் அடுத்த சில மாதங்களில் நிறைவடையவிருக்கிறது. புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படவில்லை என்றால் இன்னும் சில மாதங்களில் 11 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் இருக்க மாட்டார்கள்.

உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

துணைவேந்தர்கள் இல்லாததால் இந்த பல்கலைக்கழகங்களில் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. அண்ணா பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு வகையில் சிறந்தவை ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க பல்கலைக் கழகங்கள்  தலைமை இல்லாமல் இருந்தால் அதன் செயல்பாடுகள் அடியோடு முடங்கி, உயர்கல்வி பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது தான் அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான மோதலின் மையப்புள்ளி ஆகும். யுஜிசி பிரதிநிதி கட்டாயம் வேண்டும் என்பது ஆளுனரின் நிலைப்பாடு. ஆனால், பல்கலைக்கழக விதிகளில் அதற்கு இடமில்லை என்பது தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு ஆகும்.

எந்த பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்பட வேண்டுமோ, அந்த பல்கலைக்கழகத்தின் விதிகள் மதிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள எந்த பல்கலைக்கழகத்தின் விதிகளிலும், பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்ற பிரிவு இல்லாததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலை தான் சரியானதாகும்.

அதுமட்டுமின்றி, வேந்தர் என்ற முறையில் தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும் 3 பேர் கொண்ட பட்டியலில் இருந்து ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டும் தான் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, தேடல் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப் படவில்லை. மாறாக, தேடல் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசிதழில் வெளியிடும் அதிகாரம் உயர்கல்வித்துறை செயலாளருக்கு உண்டு. அதை ஆளுனரால் தடை செய்ய முடியாது. அரசுக்கும், ஆளுனருக்கும் இடையே நிலவும் மோதலுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் ஆகும். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கடந்த காலங்களில் ஆளுனர் பிறப்பித்த ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  அரசு வழக்குத் தொடர்ந்தது. வழக்கு தொடரப்பட்டு 13 மாதங்களுக்கு மேலாகியும் அவற்றை விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் எல்லா சிக்கலுக்கும் காரணம் ஆகும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை 12 நாட்களில் விசாரணைக்கு கொண்டு வர முடிந்த தமிழக அரசால், 13 மாதங்கள் ஆகியும் துணைவேந்தர்கள் நியமனம் குறித்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர முடியாதது விந்தையாக உள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் குறித்த சர்ச்சை தொடர வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறதோ? என்ற ஐயத்தைத் தான் இது ஏற்படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி இந்த சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here