*எல்லாவற்றையும் விட ஏன் 243 ஐ உடனடியாக எதிர்க்க வேண்டும்...*
*யாரிடமும் ஆலோசிக்காமல் அதிலுள்ள சாதக பாதகங்களைப் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தாமல் அவசர கோலத்தில் அரசாணை 243 வெளியிடப்பட்டுள்ளது.*
*அதைவிட எப்படியாவது 243 அரசாணையைப் பயன்படுத்தி ஒரு கலந்தாய்வை நடத்தி விட்டோம் என்றால் தொடர்ந்து அரசாணையை நிலைநிறுத்தி விடலாம் என பள்ளிக் கல்வித்துறை விரைந்து முனைப்பாற்றி வருவதாகத் தகவல்கள் வந்து கொண்டுள்ளன.*
*அரசாணை 243 ன் மூலம் பல ஆண்டுகளாக ஒரே ஒன்றியத்தில் பணியாற்றி தனது குடும்ப சூழ்நிலைகளை ஒருங்கிணைத்து பதவி உயர்வுக்காக தனது பணிக் காலத்தின் கடைசிக் கட்டங்களில் காத்திருந்த பல பெண் ஆசிரியப் பெருமக்களுக்கு பேரிடியாய் அமைந்துள்ள இவ்வரசாணையின் பாதகங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக கலந்தாய்வை நடத்தி முடிக்க துறை மும்முரமாய் செயல்படுவது மிகவும் வருத்தமளிக்கும் செயலாக உள்ளது.*
*ஒரே ஒன்றியத்தில் பல ஆண்டுகள் பணியாற்றினாலும் அல்லது வெவ்வேறு ஒன்றியங்களில் பணியாற்றி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக பதவி உயர்வு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என ஆறுதலோடு தாய் ஒன்றியங்களில் பணியாற்றி வந்த பெண் ஆசிரியப் பெருமக்களுக்கு தற்போது பணிபுரியும் இடமே கேள்விக்குறியாகியுள்ளது.*
*இயக்கங்களுக்கு பிடிக்காவிட்டாலோ,அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியாலோ ஒரு ஆசிரியரை மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் மாற்றுப் பணி வழங்கவோ பணி இடமாறுதல் வழங்கவோ இந்த அரசாணை வழி வகை செய்கிறது.*
*மோலோட்டமான பார்வைக்கு இவ்வரசாணை மூலம் தமிழகம் முழுவதும் எளிதாக தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று விடலாம் எனத் தெரிந்தாலும் இது தேன் தடவிய விஷம் என்பது காலம் நகர நகரத் தெளிவாகி விடும்.*
*243 அரசாணை மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கோ , இடைநிலை ஆசிரியர்களுக்கோ முழுவதுமாக தலைமையாசிரியர் பதவி உயர்வு கிடைத்து விடும் என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது.*
*ஒரு இடைநிலை ஆசிரியர் தலைமையாசிரியராப் பதவி உயர்வு பெற்று வீட்டு வாடகைப்படி முழுமையாக இல்லாத ஒன்றியங்களுக்குச் செல்ல நேர்ந்தால், தான் பெற்று வரும் வீட்டு வாடகைப் படியில்( HRA).
₹ 2350 யும் தனி ஊதியம் ₹2000 யும் ஆக மொத்தம் ஊதியத்தில் ₹4350 இழந்து பதவி உயர்வில் சென்றால் பதவி உயர்வு மூலம் பெறும் கூடுதல் தொகை ஈடு செய்யுமா? என்பதை சமூக நீதி பேசும் பெரியோர்களையும் மெத்தப் படித்த மேதாவிகளின் மனச்சாட்சிக்கே விட்டு விடுவோம்.*
*பொதுவாக பெண் ஆசிரியப் பெருமக்கள் தான் பணிபுரியும் பள்ளியிலிருந்து சில கி.மீ தூரம் வாய்ப்பு கிடைத்தாலே செல்லத் தயங்கும் சூழ்நிலையில் மாவட்டங்கள் தாண்டி பதவி உயர்வு செல்ல வாய்ப்பு வந்தால் தவிர்க்கும் சூழல் ஏற்படும் போது அவர்களிடம் பதவி உயர்வு துறப்பு செய்யச் செய்து அடுத்த நிகழ்வாக யாரும் விரும்பவில்லை எனவே நேரடியாகத் தலைமையாசிரியர் நியமனம் செய்ய துறை அதிக ஆர்வம் காட்டுவது அரசாணை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.*
*243 அரசாணை வந்த பிறகும் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறைகளில் பெரும்பாலானோர் 20 முதல் 25 ஆண்டுகளாக கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் பெற முடியாதவர்கள் தங்களது சொந்த ஒன்றியங்களுக்கு அல்லது மாவட்டங்களுக்கு கலந்தாய்வு நடக்காமலே பணிமாறுதல் பெற்றுள்ளனர் என்பது பரம இரகசியம் போல பலரால் காக்கப்பட்டு வருகிறது.*
*மற்ற கோரிக்கைகளும் முக்கியம் தான் எனினும் 243 இரத்து என்பது மிக அவசரமாக வைக்க வேண்டிய கோரிக்கை என்பதை உணர வேண்டிய நேரமிது என்பதைப் புரிந்து கைகளை உயர்த்த முன்வருவோம்.*
No comments:
Post a Comment