கோடை விடுமுறையில் குழந்தைகளைக் குடும்பத்துடன் இருக்க விடுங்கள்! - எழுத்தாளர் மணி கணேசன் - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, 20 May 2024

கோடை விடுமுறையில் குழந்தைகளைக் குடும்பத்துடன் இருக்க விடுங்கள்! - எழுத்தாளர் மணி கணேசன்

Responsive Ads Here
Let%20the%20kids%20be%20with%20the%20family%20on%20summer%20vacation!%20-%20Writer%20Mani%20Ganesan


கோடை விடுமுறையில் குழந்தைகளைக் குடும்பத்துடன் இருக்க விடுங்கள்!

ஏற்கெனவே இங்கு கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து சிறு குடும்பங்கள் பல பெருகிவிட்டன. அந்த சிறு குடும்பங்களுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தனிக் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதுதான் இன்றைய தமிழ்க் குடும்பங்களின் நடப்பு நிலைமை. காரணம், தொடுபேசியுடனான அதிநுகர்வு. மனிதர்கள் மத்தியில் வெகுவாக மலிந்து கிடக்கிறது!

ஆளுக்கொரு கைபேசி; ஆளுக்கொரு உலகம் என்றாகி விட்டது. மனிதர்கள் குறியீடுகளால் தகவல்கள் பரிமாறிக் குறைவாகப் பேசப் பழகிக்கொண்டு வருவது வேதனைக்குரியது. பல்வேறு சுருக்க எழுத்தின் மூலம் மனித இனத்தின் ஊடாகக் கோலோச்சிக் கிடந்த கதையாடல்களும் உரையாடல்களும் உறவாடல்களும் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. வெறும் தேவைக்கு மட்டுமே பேசிக் கொள்வதாக இன்றைய உறவுகள் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளது.

மனித உறவுகளில் தொன்றுதொட்டு புழங்கி வந்த ஓயாத பேச்சில் விழுந்த இந்த மௌன முடிச்சில் முதலில் நெரிபட்டு பலியாகும் பிறவிகளாகக் குடும்பத்தின் மூத்த குடிமக்கள் உள்ளனர். சட்டென்று மாறிய இந்த புதிய சூழலுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ள தற்கால சூழலில் இவர்கள் அதிகம் சிரமப்படுவதை நன்கறிய இயலும். அவர்களின் ஏக்கப் பெருமூச்சு இந்த மனித உலகில் அவர்களது உறவில் புது வெப்பமயமாதலை உருவாக்கியதன் விளைவே உறவுகளுக்குள் வறட்சி மிகுந்து விரிசல்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக நிகழும் சமூகக் கேடுகள் பற்பல. சொந்த பெற்றோரைத் துன்புறுத்திக் கொல்லுதல், அநாதையாகக் கைவிடுதல், பொதுவெளியில் அடித்து உதைத்தலில் ஈடுபடுதல், குடும்பத்தில் இழிவாக நடத்துதல், ஓர் அஃறிணை போல் நடத்துதல், கண்டு கொள்ளாமை, வீண் பாரமாக நினைத்தல் முதலான பேராபத்து மிக்க மனிதத்தன்மையற்ற செயல்கள் நிகழ்வதை நெஞ்சம் பதைபதைக்க அறிய முடிகிறது.

ஈராயிரத்தின் குழவிகளாய் விளங்கும் பிள்ளைகளுக்கு, பெற்றோர்கள் நல்ல, தரமான கடைசரக்காகிப் போன கல்வியைக் காசு கொட்டி அழுது வாங்கிக் கொடுத்த அளவிற்கு அவர்கள் நல்லொழுக்கத்தைக் கசடறக் கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் நையா பைசா செலவழிக்காமல் மறந்து போனதையும் எளிதில் எடுத்துக்கொள்ள இயலாது. நேயர் விருப்பமே தங்கள் விருப்பம் என்று பள்ளிகளில், கற்பித்தலில் நீதிநெறி வகுப்புகள் காணாமல் போயின. மாணவர்கள் மதிப்பு மிக்கவர்களாக அன்றி வெறும் மதிப்பெண்களுக்காகவே தயார் செய்யப்பட்டனர்.

இத்தகைய அவலநிலை இப்போதும் தொடர்வது மனித சமூகத்திற்கு நல்லதல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆயக் கலைகளுள் தலையாயதாகத் திகழும் வாழும் கலையைப் புறந்தள்ளி எஞ்சியவற்றைக் கற்றுக்கொள்ள நகரமயமான நடுத்தர வர்க்கத்தினர் அங்குசத்தால் விரட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கவே பரிதாபமாக உள்ளது. இப்படி விரட்டியடிக்கப்படும் குழந்தைகள் தாம் பிற்காலத்தில் இவர்களுக்கு எதிராகச் சாட்டைக்குச்சியை எடுக்கின்றார்களோ என்று நடப்பு நிகழ்வுகளை உற்றுநோக்கையில் எண்ணத் தோன்றுகின்றது.

எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடை என்பது வெப்ப அலையை அதிகம் உமிழ்வதாக உள்ளது. வெக்கை எல்லோரையும் சக்கையாகப் பிழிகிறது. அதாவது, வெய்யில் வயது வேறுபாடு பார்க்காமல் வாட்டி வதைப்பதாக இருக்கும் கொடிய சூழலில் தம் நிறைவேறாத, நிறைவேற்றிக் கொள்ள முடியாத, ஆசை அதிகம் கொண்ட பெற்றோர்கள் தம் சின்னஞ்சிறு குழந்தைகளைக் கோடை கொண்டாட்டம் என்று தம்பட்டம் அடிக்கும் வியாபாரிகளிடம் அடகு வைப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல.

கோடையில் அதைச் சொல்லித் தருகிறேன்; இதைக் கற்றுத் தருகிறேன் என்று பணம் கொழிக்கும் கோடைக் கொண்டாட்ட அலப்பறைகள் ஓய வேண்டிய தருணமிது. அல்லது ஒழிக்க வேண்டியது இன்றியமையாதது. ஏனெனில், செயற்கை நுண்ணறிவு யுகத்தில் வாழும் இதயமுள்ள மனிதன் இயந்திர மினிதனாக ஆகிப் போவதை யாராலும் தடுக்க முடியாது. மனித உறவுகள் மேம்பட அடிப்படையாகத் தேவைப்படும் அன்பும் பாசமும் அக்கறையும் அளவளாவும் குணமும் பணிவும் இல்லாமல் சிலம்பம், கராத்தே, பாட்டு, நடனம், நீச்சல் முதலானவை கற்று என்ன பயன்?

ஓராண்டில் பதினோரு மாதங்கள் கல்வியின் பொருட்டு ஓடும் உப்புச்சப்பில்லாத வாழ்க்கையில் இந்த கோடை மாதம் முழுவதும் குடும்பமாகப் பேசிச் சிரித்துக் குதூகலமாகப் பொழுதைக் கழிப்பதில் நேரம் செலவிடுவதே நல்லது. பெற்றோரைப் பற்றி பிள்ளைகளும் பிள்ளைகள் குறித்து பெற்றோரும் முழுதாக அறிந்து கொள்ள வாராது வந்த மாமணிபோல் அரிதாகக் கிடைத்த இந்த கோடைக்கால விடுமுறை பொழுதுகள் பெரிதும் உதவக்கூடும்.

இந்த காலகட்டத்தில் தொடுபேசிகளின் தனிநபர் பயன்பாட்டை வெகுவாக குறைப்பது நல்ல பலனளிக்கும். இதுகுறித்து குடும்பத்துடன் திடமாக உறுதிமொழி மேற்கொள்வதும் அதனைப் பிறழாமல் பின்பற்றுவதும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்றியமையாதது.

பந்தயக் குதிரைகளாக மதிப்பெண்கள் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் மாமருந்து தான் கோடை விடுமுறைக் காலம் ஆகும். அதையும் வேறொரு வகையில் நவீன முறையில் தொடர்ந்து தீவிர பரப்புரை செய்து விளம்பரப்படுத்தப்படும் கூலிக்கு மாரடிக்கும் புதுவகைக் கொட்டடியில் குழந்தைகளை அடைப்பது என்பது தேவையில்லாதது. பெற்றோரின் இந்த பேராசையில் பலிகடா ஆக்கப்படும் குழந்தைகள் தாம் பிற்காலத்தில் வட்டியும் முதலுமாக அவர்களுக்கே அதைத் திருப்பித் தர மனத்தளவில் தயாராகி விடுகிறது.

உண்மையில் கோடை விடுமுறையை மிகவும் குதூகலமாகக் கழிப்பதில் அதிகம் ஈடுபடுபவர்களாக இருப்போர் ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களின் பிள்ளைகள் ஆவார்கள். அத்தகையோரிடம் காசும் இல்லை. அதற்கான ஆசையும் இல்லை. சொந்த குடும்ப உறவினர்கள் வீடுகளில் அவர்களின் குழந்தைகளுடன் பொழுதை இனிதே கழித்து பள்ளி மீளத் திறக்கும் காலத்தில் வீடு திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

அதேபோல், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் குடும்பத்துடன் கோடையைக் கும்மாளத்துடன் கழித்து விடுகின்றனர். அதாவது, பல்வேறு புதிய இடங்களுக்கு இவர்கள் குடும்பம் சகிதமாக இடம் பெயர்ந்து மகிழ்ச்சியுடன் வெம்மையைக் குளுமையாக்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளதும் எண்ணத்தக்கது.

இதில் பாவப்பட்ட பிறவிகள் நடுத்தர வர்க்கத்து பிள்ளைகள் மட்டுமே ஆவர். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் அடக்கம். இத்தகையோர் நிராசைக்கும் பேராசைக்கும் இடைப்பட்ட நப்பாசையில் உழல்பவர்கள். இவர்கள் தாம் கோடைக் கொண்டாட்டம் பெயரில் கடை விரிப்போரின் இரைகள் ஆவார்கள்.

இத்தகைய வீட்டிற்குள் வளர்க்கப்படும் குரோட்டன் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பினும் பல்வேறு அறைகூவல்கள் நிறைந்த வாழ்க்கைச் சூ(சு)ழலை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுவதைக் காண முடிகிறது. ஏனெனில், இத்தகையோர் வாழ்க்கைப் பாடத்தில் ஒரு பெரும் சுழியமாக உள்ளனர். அதேவேளையில், ஏனையவற்றை ஏராளம் கற்று வைத்திருக்கின்றனர். மனனம் செய்து வைத்தும் கூறுகின்றனர். காற்றில் கம்பும் சுற்றுகின்றனர். பயன்?

இந்த அபாயத்திலிருந்து மீள வேறு உபாயம் இருக்கிறதா என்றால் உண்டு என்பதே உறுதியான பதில் ஆகும். கோடையில் குழந்தைகளுக்குத் திண்டாட்டத்தைத் தரும் கொண்டாட்டம் குறித்த விளம்பரங்களுக்கு முதலில் பெற்றோர்கள் விடைகொடுப்பதே சாலச்சிறந்தது. இதனைக் கருத்தில் கொண்டு தான் அரசு சிறப்பு வகுப்புகள் கூடாது என்று கல்வித்துறை மூலமாகப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் தாம் தலைசிறந்த பள்ளிகள் எனும் மூடத்தனமான எண்ணத்தை மூளையிலிருந்து குடும்பத்தின் நலன் கருதி முளையிலேயே பெற்றோர்கள் கிள்ளி எறிவது மிக நல்லது.

இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்பதாக இனி ஒவ்வொரு கோடையையும் குடும்பத்துடன் கழிப்போம். குடும்பமாக அகமும் புறமும் மகிழ்ந்து இருப்போம் என்னும் உணர்வைக் குழந்தைகளுக்குக் கோடைக்கால பரிசாக என்றென்றும் அளித்திட முன்வருவது மிகவும் தலையாயது. எல்லாவற்றையும் விட சக மனிதர்கள் மீதான நேயத்தை வளர்க்கும் மானுடப் பண்புகள் முக்கியமானதல்லவா? முதலில் குழந்தைகளைக் கொளுத்தும் இந்த கோடையிலும் ஏதேதோ வித்தைகள் சொல்லித் தருகிறேன் என்று வதைப்பதை விடுத்து அவர்கள் குடும்பத்தினருடன் இனிதே வாழவும் ஒன்றித்து வசிக்கவும் இருக்க அனுமதிப்போம்! எழுத்தாளர் மணி கணேசன்

Post Top Ad